89. அருள்மிகு கும்பேஸ்வரர் கோயில்
இறைவன் கும்பேஸ்வரர்
இறைவி மங்களநாயகி
தீர்த்தம் காவிரி, மகாமக குளம்
தல விருட்சம் வன்னி
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் குடமூக்கு, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'கும்பகோணம்' என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
தலச்சிறப்பு

Kumbakonam Gopuramஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டபோது அமிர்த கும்பம் அடங்கிய கலசம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்கு தங்கியது. சிவபெருமான் கிராத மூர்த்தி வேடம் தாங்கி ஒரு பாணமெய்தி குடத்தை உடைத்து சிருஷ்டியை துவக்கி வைத்தார். குடம் தங்கிய இடமாதலால் இத்தலம் 'குடமூக்கு' என்று பெயர் பெற்றது. இக்கோயில் 'ஆதி கும்பேஸ்வரர் கோயில்' என்று அழைக்கப்படுகிறது.

Kumbakonam Moolavarமூலவர் கும்பேஸ்வரர், லிங்க வடிவத்தில் காட்சி தருகின்றார். பார்ப்பதற்கு கும்பத்தை கவிழ்த்து வைத்தது போல் உள்ளது. சுவாமி தன்னைத் தானே பூசித்துக் கொண்ட தலம். இது ஐந்தாம் நாள் பிரம்மோற்சவத்தின்போது நடத்திக் காண்பிக்கப்படுகிறது. அம்பிகை 'மங்கள நாயகி' என்று வணங்கப்படுகின்றார்.

அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. இது மந்திர பீடமாதலால் அம்பாள் 'மந்திர பீடேஷ்வரி' என்றும் அழைக்கப்படுகின்றாள்.

Mahamahamபன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தினத்தன்று இக்கோயில் சுவாமி இடப வாகனத்தில் மகாமக குளத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி அளிப்பார்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், அப்பர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com